Tuesday, February 15, 2022

மரணம் ஒரு கலை : சாக்ரடீஸ்


     மத்திய தரைக்கடலை அள்ளிப் பருகுவதைப் போல் அமைந்துள்ள கிரேக்க நாட்டின் கிழக்கில் அமைந்துள்ளது. ஏதென்ஸ் உலக நகரங்களிலேயே தனித்துவமானது. நிலவியலாளர்களும், கணித வல்லுநர்களும், கவிஞர்களும், மெய்யியலாளர்களும் வீதிக்கு வீதி நடமாடிய அறிவுலகம். முதன்முதலில் உலக நாடுகளுடன் கடலோடி செல்வத்தில் செழித்த நகரம்.

      அறிவை நேசித்த, அறிவாக உருப்பெற்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் முகப்பினை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக அலங்கரித்துக் கொண்டிருப்பவர் தத்துவஞானி சாக்ரடீஸ். குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், முழங்கால் வரை தொங்கும் தளர்ந்த அழுக்கான ஆடையுடன் இருந்த சாக்ரடீஸ்தான் "கேள்வி கேள்" என்று சொன்னதற்காக கொல்லப்பட்ட முதல் அறிவுஜீவி.

மனசை ஆராய்ந்த அறிஞன்

தனக்கு முன்னாள் இருந்த தத்துவ ஞானிகள் மரத்தையும் கல்லையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, சாக்ரடீஸ் மனித மனதை ஆராய்ந்தார். மனதைப் போன்று மர்மங்கள் நிரம்பிய ஆய்வுப் பொருள் வேறொன்றில்லை என்று சாக்ரடீஸ் உணர்ந்திருந்தார். 

      மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை சாக்ரடீஸ் எழுப்பினார். ஏதென்ஸ் நகரத்தின் மூலை முடுக்குகளில், கோயில்களில், நாடக அரங்குகளில், விளையாட்டுத் திடல், சந்தை, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சாக்ரடீஸ் பேசிக்கொண்டே இருந்தார். ``கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்” போன்ற பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பிய சாக்ரடீஸ் ஏதென்ஸின் பெரியார்.


        நகர குடியரசாக இருந்த ஏதென்ஸின் ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மக்கள் பழமையை நம்புகிறவர்களாகவும், மரபான மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கும்வரைதான் தங்களால் தொடர்ந்து ஆட்சியாளர்களாக இருக்க முடியும் என்ற தெளிவு கொண்டவர்கள். "எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்" என்ற சாக்ரடீஸின் பின்னால் கூடிய இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டு, ஆட்சியாளர்கள் அச்சப்பட்டார்கள். இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் ஆட்சியதிகாரம் நம் கையில் நீடிக்காது என்பதற்காக சாக்ரடீஸை கொல்லும் வாய்ப்பினை உருவாக்கினார்கள்.

அறிவுக்கு எதிரான முதல் வழக்கு

        ஏதென்ஸ் நகரத்தில் நீதிபதிகளையும் மக்களே தேர்ந்தெடுப்பார்கள். அமெச்சூர் வழக்கறிஞர்கள். இத்தகைய நீதிமன்றத்தில் மெலிட்டஸ் எனும் கவிஞனும், அநீதன் எனும் தோல் வியாபாரியும் சாக்ரடீஸ்மீது குற்றம் சுமத்துகிறார்கள். அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு. ``ஏதென்ஸ் நாட்டு மக்கள் வணங்கும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை, சந்திரனை மண் என்கிறார், சூரியனைக் கல் என்கிறார். கடவுள்களால் விளக்கப்படாத மறைபொருட்களை ஆராயத் தொடங்கியதின் மூலம் நகரத்துக்குத் தீமையை உண்டாக்கப் பார்க்கிறார். கெட்டதை நல்லதுபோல் பேசி இளைஞர்களைக் கெடுக்கிறார்’’ என்பன உள்ளிட்டவையே சாக்ரடீஸ்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். நீதிமன்றம் சாக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்கிறது.


      குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதுசாக்ரடீஸுக்கு 70 வயது. ``என்னுடைய எதிரிகள் அநீதியும் அறிவின்மையும்தான்” என்ற சாக்ரடீஸின் வாதம், இன்றும்பொது வாழ்வில் போராட முன்வருபவருக்கான திறவுகோல்களாக இருக்கின்றன. "கடவுளையும் கடவுள் கோட்பாட்டையும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால், எங்கே கடவுளை ஒப்புக்கொள்ள மறுத்துவிடுவேனோ என்று பயப்படுவதே அதைவிட நாத்திகமாக இருக்கிறது" என்ற சாக்ரடீஸ், எப்போதும் யாருக்கும் ஆசிரியராக இருந்து போதித்தது இல்லை. அவருக்கென்று எந்த பள்ளியும் இல்லை. அவரின் தர்க்கவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.


         தீர்ப்பு எழுதிய பின்புதானே குற்றச்சாட்டே பதிவு செய்யப்பட்டது? நாடகத்தின் அடுத்த காட்சிபோல் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை கொடுக்கலாமா? மன்னிப்புக் கொடுக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 501 பேர் கூடியிருந்த அவையில், சாக்ரடீஸ் எனும் காலத்தைக் கடந்து புகழ்பெறப் போகும் ஞானி, தீர்ப்பை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டிருந்தார். `ஜனநாயகம், ஆட்சியாளர்களின் ஏவலாளியாக மாறும் ஆபத்தையும் உட்கொண்டது’ என்பதை காலம் சாக்ரடீஸின் வரலாற்றில் இருந்தே அறிந்துகொண்டது.

   அறிவைக் கொண்டாடும் நகரம், அறிவை நேசிக்கும் நகரம், அரங்கங்கள்தோறும் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நகரம், சாக்ரடீஸை மரணத்தின் வாயிலில் நிறுத்தி வைத்திருந்தது. வாக்களித்தார்கள் கூடியிருந்தோர். மன்னிக்கலாம் என 220 பேரும், மரண தண்டனை அளிக்கலாம் என 281 பேரும் வாக்களித்தனர். 61 வாக்கு வித்தியாசத்தில் உலகத்தின் ஆகச் சிறந்த தத்துவ ஞானியின் மரணம் தீர்மானிக்கப்பட்டது. தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு, அவர்களின் வெற்றிக்கான பரிசாகத் தன் உயிரையே கொடுக்கத் தயாரானார் சாக்ரடீஸ்.

சாகரடீஸின் குடும்பம்

     போர் வீரராக, சிற்பியாக இருந்த சாக்ரடீஸ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மெர்ட்டின்மூலம் இரண்டு மகன்கள். மனைவியின் மரணத்துக்குப் பிறகு சாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சாக்ரடீஸை கொடுமைப் படுத்தியவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான சாந்திப்பியின் மூலம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தின் வறுமை வாழ்வினைப் பொறுக்க முடியாத சாந்திப்பியால் சாக்ரடீஸிடம் கோபத்தைத்தான் காட்ட முடிந்தது.

     டெல்பி என்ற இடத்தில் இருந்த ஏதென்ஸின் தெய்வம் டிலோஸுக்குத் திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. (நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது). பூசைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டெல்பி சென்று திரும்பி வர, ஒரு மாத காலமாகும். நோன்புக் காலமான அந்நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் சாக்ரடீஸின் மரணம் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.


 “நாட்டிலே எவன் ஒருவன் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிக்கொண்டிருக்கிறானோ, அவனே சிறந்த ஞானி” என்று முன்பு அந்தக் கோயிலில் அருள் வந்த பெண் ஒருத்தி கூறியிருந்தாள். சாக்ரடீஸ் பின்னால் மக்கள் நம்பிக்கையுடன் சென்றதற்கு அப்பெண்ணின் அருள் வாக்கும் காரணம். காலத்தின் விந்தை, இப்போது அதே டிலோஸ் தெய்வத்தை வழிபட்டுத் திரும்பப் போகும் கப்பல் சாக்ரடீஸின் மரணத்தை உறுதிசெய்ய வருகிறது.

   ஒரு மாத காலம் கை கால்களில் கட்டப்பட்ட சங்கிலியுடன் சிறைச்சாலையில் நண்பர்களுடன் தர்க்கம் செய்தார் சாக்ரடீஸ். சிறையில் இருந்த காலத்திலும் எழுதினார். கப்பல் நாளைத் திரும்பி வரப்போகிறது என்பதையறிந்த சாக்ரடீஸின் நண்பன் கிரிட்டோ, சிறையில் இருந்து தப்பிச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக சாக்ரடீஸிடம் சொல்கிறான்.

 ``மரண தண்டனை நிறைவேற்றாமல் போனால்கூட இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இயற்கை மரணம் அடையப்போகும் நான், சிறையில் இருந்து தப்பிச் சென்று என் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொள்ள விரும்பவில்லை” என்று மறுத்துவிடுகிறார்.

ஒரு கோப்பை விஷம்

        மரண தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள். கை கால் சங்கிலிகள் விலக்கப்படுகின்றன. எப்போதும் விஷம் கொண்டுவருபவனின் கை அன்று நடுங்குகிறது. தான் எப்படி விஷத்தைப் பருக வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டறிகிறார் சாக்ரடீஸ். பிறகு குளித்துவிட்டு வருகிறார். சிறைக் காவலன் சொல்லியபடி ஹெம்லாக் என்ற அந்த விஷத்தை மிச்சமின்றி பருகுகிறார். ஓரிடத்தில் நிற்காமல் அறை முழுக்க நடக்கிறார். கால்கள் சோர்ந்துபோக படுக்கையில் அமர்கிறார். சோர்ந்துபோன பிறகு கால் நீட்டி படுக்கிறார். அவரின் கால்களை அழுத்திவிட்ட காவலன், “நான் அழுத்துவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்கிறான். “இல்லை” என்கிறார். காவலன் அழுத்துவதை நிறுத்திக்கொள்கிறான்.

 கால்களில் பரவிய விஷம், இதயத்துக்கு வருகிறது. சாக்ரடீஸுக்கு மூச்சடைப்பதுபோல் இருக்கிறது. போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, நண்பன் கிரிட்டோவை அழைக்கிறார். “கிரிட்டோ, நான் அஸ்குலபியஸ் தெய்வத்துக்கு சேவல் பலியிடுவதாக வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மறக்காமல் அக்கடனை நிறைவேற்றிவிடு” என்று சொல்கிறார். சில நிமிடங்களில் உயிர் பிரிகிறது.

  அறிவின் திடத்தை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஒரு கோப்பை விஷத்தை, தேநீர் பருகுவதுபோல் நிதானமாகப்பருகித் தன்னையே பலியிட்டுக்கொண்டார் சாக்ரடீஸ்.

                                                                             அ.வெண்ணிலா

Sunday, September 19, 2010

பெரியார் பிறந்தநாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி-2010

தந்தை பெரியார் அவர்களின் 132 பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-9-2010 வெள்ளிக் கிழமை காலை 11-00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சாதி,மத மூடநம்பிக்கை ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார்,மாவட்டத்தலைவர் துரைசாமி,மாநகர்த் தலைவர் இரமேசுபாபு,மாநகரச் .செயலாளர் முகில்ராசு,ஒன்றிய தலைவர் அகிலன், மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், அறிவரசு, சண்.முத்துக்குமார், அவிநாசியப்பன்,கருணாநிதி,கமல்,கார்த்தி,முரளி உட்பட மாநில,மாவட்ட,மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..

உறுதியேற்போம்....

வெள்ளி, 17 செப்டெம்ப்ர், 2010


அறியாமை இருளகற்றி

அறிவியல் வளர்க்க

உறுதியேற்போம்....

சாதி மறுப்புத் திருமணம் செய்து

சமத்துவம் படைக்க

உறுதியேற்போம்...

ஆணாதிக்கக் கொடுமையிலிருந்து

பெண்ணினத்தை மீட்டெடுக்க

உறுதியேற்போம்...

சாதி மத சழக்குகளிலிருந்து

தமிழர்களை விடுவிக்க

உறுதியேற்போம்....

அரசு தனியார் வேலைகளில்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய

பங்கை பெறுவதற்கு

உறுதியேற்போம்...

உலக வர்த்தக பேரத்தில்

உருக்குலையும் தமிழினத்தை

பாதுகாக்க உறுதியேற்போம்...

ஆரியப் பார்ப்பனர்

கொட்டங்களை

அடியோடு ஒழிக்க

உறுதியேற்போம்....

வடவர்களின் பிடியிலிருந்து

தமிழ்நாட்டை விடுவிக்க

உறுதியேற்போம்...

பார்ப்பன இந்திய சதியாலே

சர்வதேச துணையோடு

சிங்களம் அழித்த ஈழத்தை

மீட்டெடுக்க உறுதியேற்போம்...

தமிழ்நாடு தமிழருக்கேயென

அய்யா சொன்ன வார்த்தைகளை

உண்மையாக்க உறுதியேற்போம்...

Friday, December 12, 2008

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”


“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

vps2

முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?

91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.

அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)

ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……

மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.

இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.

“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.

“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”

(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.

ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.

தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.

அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.

நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.

ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.

தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.

ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?

இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.

ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……

“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”

உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’

சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.

எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

சென்றுவா எம் நண்பனே.



நன்றி

http://pamaran.wordpress.com

Friday, November 28, 2008

வீரவணக்கம்

சமூகநீதிப்போராளி 
வி.பி. சிங் 
அவர்களுக்கு
வீரவணக்கம்

Tuesday, October 28, 2008

ஜெயலலிதா பிதற்றல்

தமிழீழம்
"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?

ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்னை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி ராஜ்ஜியமாக இருந்த போது இந்திய ராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப் படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் ஏஸி அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.

நன்றி. குமுதம் வார இதழ்

Wednesday, October 1, 2008

சுயமரியாதை

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
தந்தை பெரியார்