Tuesday, September 18, 2007

பெரியார்

பெரியார், புத்துலக தொலை நோக்காளர்,தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தைஅறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள்மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி -யுனெஸ்கோ 27௬௧970

Wednesday, September 5, 2007

எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான்

பயனற்ற வாதங்களால் பொழுதழிக்கும் வேலையற்றதுகளின் போக்கை `மயிர் பிளக்கும் வாதம்’ என்று மக்கள் எள்ளலாய்க் குறிப்பிடுவார்கள். உடலும் பொருளும் தேய்ந்துபோன 'மைனர்’களுக்குத்தான் இம்மாதிரியான மயிர் பிளக்கும் வாதங்கள் உற்சாகம் தரும் என்றில்லை. புலமைப் பகட்டர்களுக்கும் இதில் போதை ஏறுவதுண்டு. சித்தினி பத்தினியாக இருக்க முடியுமா? 'இலை’ வடிவம் எம்மாதிரியானது? என்கிற ஆராய்ச்சியில் மைனர்களுக்கு உற்சாகம் என்றால், பெரியார் தாடியில் எத்தனை மயிர்? திராவிட இயக்கம் என்பது விஞ்ஞான வகைப்பட்டதா? என்பன போன்ற வாதங்களில் புலமைப் பகட்டர்களுக்கு உற்சாகம். இவர்கள் `அறிவுப் பூர்வமாகவும்’ ‘ஆதாரப் பூர்வமாகவும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? `திராவிட மாயை’யிலிருந்து தமிழர்களை விடுவித்து, தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலை பெற்றதொரு புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்களா? ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக அதாவது திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு தோன்றிய நாள் முதலாகவே இம்மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்புக் குழுக்களும் விவாதங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது போலவே அப்போதும் திராவிட இயக்கத்துக்கு எதிராகத் தமிழை நிறுத்திய பலரும் இறுதியில் திராவிட இயக்கத்தின் கருணைக்கு ஏங்குகிறவர்களாகவே உயிர் விட்டார்கள்.திராவிட இயக்கத்திலிருந்து தமிழையோ, தமிழிலிருந்து திராவிட இயக்கத்தையோ பிரிக்க முடியாது. பிரித்தால் எஞ்சுவது பூஜ்யமே என்று எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும், ஆனால் புலமைப் பகட்டு சும்மா இருக்க விடுவதில்லை. திராவிட இயக்கத்தை எதிர்ப்பதற்கு இனி மேல் புதிய ஆதாரமாக நடிகர் விஜயகாந்தின் கட்சியையும் திராவிடக் கட்சி என்று குறிப்பிடுவார்கள்.நடிகர் ராஜேந்தர், கல்வி வர்த்தக சபைத் தலைவர் என்று அறியப்பட்ட பி.டி. குமார் என்று இன்னும் பலரும் கூட திராவிடக் கட்சிக்காரர்களாகவே பேசப்படுகிறார்கள். திராவிடக் கட்சிகளின் எண்ணிக்கை பெருகுவதால், தந்தை பெரியாரின் கருத்துக்கள் பல முனைகளில் பரவுகிறது என்று யாரும் கருதவில்லை. உண்மையில் திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்களும் கூட 'திராவிட’ அடைமொழிகளுடனும் அலங்காரத்துடனுமே வருகிறார்கள். திராவிட இயக்க எதிர்ப்பாளர்களுக்கு இந்த 'திராவிடக்’ கட்சிகளும் தேவைப்படுகின்றன.இந்தியத்தின் பெயரால், தமிழின் பெயரால், திராவிடத்தின் பெயரால், புரட்சியின் பெயரால், தலித் என்கிற பெயரால், திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பத்திரிகை நடத்த முடிந்தாலே கட்சி கட்டி விட்டதாகவும், தனது கருத்துக்களால் நாடே கிளர்ந்தெழுந்து விட்டதாகவும், 'திராவிட மாயை’ இனி எடுபடாது என்பதாகவும், பெரியாரின் இடத்தில் இனி 'உலகம்’ தன்னையே அமர்த்தப் போவதாகவும் புலமைப் பகட்டர்களுக்கு ஒரு புல்லரிப்பு.'திராவிடம் என்ற சொல் வடவர் தந்தது. திராவிடம் என்பது தமிழரைக் குறிக்காது. திராவிடர் என்று தமிழரை அழைப்பது அவமானம். திராவிடம் என்பது தேசியம் ஆகாது' என்று நூறுவிதமான மயிர் பிளக்கும் விவாதங்கள் வெகுகாலமாய் இங்கே காதைக் கிழிக்கின்றன.இந்த வாத - பிரதிவாதங்களுக்கு அப்பால் அரசியல் - சமூக - தத்துவ - மக்கள் பார்வையில், திராவிட இயக்கம் என்றால் பெரியார் கட்சி அல்லது பெரியார் கருத்துக்களை ஏற்கும் இயக்கம்; அவ்வளவுதான்.பெரியார் தன் இயக்கத்துக்குத் திராவிடம் என்ற சொல்லை ஏன் தேர்ந்தெடுத்தார்? திராவிடம், திராவிடன் என்கிற சொல் திருஞான சம்பந்தனுக்கு ஒரு விதமாய்ப் புரிந்திருக்கலாம். கால்டு வெல்லின் ஆய்வில் திராவிடத்துக்குப் பிறிதொரு பொருள் விரியலாம். ஆனால், பெரியாரின் 'திராவிட’ இயக்கம் என்பது புதிய உள்ளடக்கம் கொண்டது. நிற - இன (வர்ணாஸ்ரம தர்மத்தை) வெறியை எதிர்ப்பது. பகுத்தறிவை வளர்ப்பது. தனிமனித சுயமரியாதையிலிருந்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை வரை பொதுநலம் கெடாத சுதந்திரத்தை அனுமதிப்பது. மத மூடநம்பிக்கையிலிருந்து மனித குலத்தை மீட்பது. சமூக மாறுதலை முன்னிறுத்திப் போராடுவது. விஞ்ஞான சோஷலிசத்துக்குச் சமூகத்தை அழைத்துச் செல்வது என்று பெரியாரின் ‘திராவிட’த்துக்குப் பன்முகத் தன்மை உண்டு என்றபோதிலும் பாசிச (மனுதர்ம) எதிர்ப்பு என்கிற வரலாற்றுத் தேவையே இந்த இயக்கத்தைப் படைத்தளித்ததனால் பாசிச எதிர்ப்பு (பார்ப்பனிய எதிர்ப்பு) என்கிற அம்சம் முதன்மை பெற்றது.பாசிசம் - பார்ப்பனியம் - என்கிற சமூகக் கொடுமைக்குப் பலியான மக்களையே அதற்கெதிரான படையாக நிறுவுவது என்கிற அம்சத்தில் பெரியாரின் இயக்கம் தனித்தன்மை பெற்றது. சுயமரியாதை இயக்கமாய் அரும்பிய இந்தநிறுவனம் மார்க்சியத்தின் முகடு வரை தொட்டபோதிலும் சமதர்ம இயக்கம் என்றோ வேறு எந்தப் பெயரோ ஏற்காமல் திராவிடர் கழகம் - இயக்கம் என்று அறிவித்தது ஏன்? இம்மாதிரியான ஒரு கேள்வி 1848-இல் மார்க்ஸ் - எங்கெல்சுக்கு முன்னேயும் எழுந்தது. எந்த ஓர் இலட்சியமும் உறுதியான ஓர் அமைப்பையும் தலைமையையும் கொண்டிருக்கவில்லையென்றால் அது மனவெளிகளிலேயே அலைந்து மறையும் என்பதால் 'தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை முன்னிபந்தனையாகக் கொண்ட ஓர் அமைப்பை அவர்கள் கட்டுகிறார்கள். அதற்கான அறிக்கை ஒன்றையும் தயாரிக்கிறார்கள். அப்போது தான் அந்தப் பிரச்சினை எழுகிறது.தங்களது அறிக்கைக்கு என்ன பெயர் சூட்டுவது?சோஷலிஸ்ட் கட்சி அறிக்கையா?கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையா?'அறிக்கை'க்குச் சூட்டப்பட்ட பெயரின் தேர்வு குறித்து எங்கெல்ஸ் எழுதுகிறார்:"தற்போது சோஷலிச இலக்கியங்கள் யாவற்றிலும் 'அறிக்கை’ மிகவும் பல்கிப் பரவி, அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாக இருக்கிறது. என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானு கோடித் தொழிலாளி மக்களால் பொது வேலைத் திட்டமாய் ஏற்கப்பட்டிருக்கிறது என்பதிலும் அய்யப்பாட்டுக்கு இடமில்லை. ஆயினும் அது (அறிக்கை) எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோஷலிஸ்ட்டு அறிக்கை என்று பெயர் சூட்ட முடியவில்லை.1847-இல் சோஷலிசம் மத்திய தரவர்க்க இயக்கமாய் இருந்தது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம் 'கண்ணியவான் மனப்பாங்கு’ கொண்டதாய் இருந்தது. கம்யூனிசம் அதற்கு நேர்மாறானதாய் இருந்தது.ஆரம்பத்திலிருந்தே எங்கள் கருத்தோட்டம் "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்’’ என்பதாய் இருந்ததால், 'சோஷலிசம்’, 'கம்யூனிசம்’ என்கிற இவ்விரு பெயர்களில் நாங்கள் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சந்தேகத்திற்கு இடம் இருக்கவில்லை. அன்று முதலாய் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.’’கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பல மொழிகளில் வெளியிடப்பட்டபோதும் முன்னுரைகளில் இதை மறவாமல் குறிப்பிட்டிருக்கிறார் எங்கெல்ஸ். தமிழகத்தில் நிலவிய அரசியல் சமூகப் பின்னணியில் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும், மார்க்ஸ் - எங்கெல்ஸ் எடுத்த அதே முடிவுக்குத்தான் வர முடிந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது இந்தியாவில் சோஷலிசம் என்கிற பெயர் மாத்திரமல்ல, கம்யூனிசம் என்கிற பெயரும் கூட அதிகம் படித்தவர்களின் மத்தியிலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. தோழர் ஜீவாகூட மத்தியத் தலைமைக்கு இதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெரியாரோ சமூகத்தின் அதலபாதாளத்தில் உள்ள மக்களைப் பற்றிச் சிந்தித்ததால் அவர்களுக்கான அமைப்பு என்பது அதன் பெயரிலேயே தெரியவேண்டும் என்று விரும்பினார்.இவை எல்லாமே இந்த இயக்கத்தின் இயல்பும் இலட்சியங்களும்தான். ஆனால் பாசிச (மனுதர்ம) எதிர்ப்பு என்கிற வரலாற்றுத் தேவையே இந்த இயக்கத்தைப் படைத்தளித்தது. அதனால் பாசிச எதிர்ப்பே இயக்கத்தின் முன்னிபந்தனையாக விதிக்கப்பட்டிருக்கிறது. பாசிசம் அதிகார முழக்கங்களோடு வந்தாலும், இதிகாச விளக்கங்களோடு வந்தாலும் திராவிட இயக்கம் அதை எதிர்த்தே நிற்கும். அடக்குமுறைகளும் மதவகைப்பட்ட போதனைகளும் ஒன்றுக்கொன்று ஆதாரமானவை என்பதை மறந்துவிடவேண்டாம்.இந்த இயக்கத்துக்குக் கம்யூனிஸ்ட் கட்சி என்றோ, தமிழர் கழகம் அல்லது தமிழியக்கம் என்றோ பெயரிடாமல் திராவிடர் கழகம் - திராவிட இயக்கம் என்று அறிவித்தது ஏன்?தமிழியக்கத்தின் தமிழுணர்வோடும், நீதிக்கட்சியின் சமூக நீதியோடும் சுயமரியாதை இயக்கம் இசைந்து செல்ல முடியும். ஆனால் முரண்படும் அம்சங்களோ பல உண்டு. ஓர் அரசியல் கட்சி என்கிற முறையில் நீதிக்கட்சி 'சமூக நீதி’யுடன் நிறைவு கொண்டு விட்டது. ஆனால் பெரியாரும் அண்ணாவும் இந்த எல்லையோடு நின்று விடவில்லை. சுயமரியாதை, தேசியம், பகுத்தறிவு, சோஷலிசம் என்று பரந்த அளவில் தமது போராட்டங்களை நடத்தினார்கள். சுயமரியாதை இயக்கத்தின் தொடர்பு எங்கே கொண்டு செல்லுமோ என்று நீதிக்கட்சியினர் அஞ்சினார்கள். பெரியாரை அப்புறப்படுத்தவே எண்ணினார்கள். வரலாற்றுப் புகழ்மிக்க 'அண்ணா தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதும் 'போதும் பொது வாழ்க்கை’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள். நீதிக்கட்சி தனது வரலாற்றுக் கடமையை முடித்துக் கொண்டு அரங்கிலிருந்து மறைந்து போனது. தமிழியக்கம் என்பது சமயப் பற்றுள்ள புலவர் குழுவாக இருந்தது. 'பாமர மக்களின் கொச்சைத் தனத்திலிருந்து’ தமிழைத் தனிமைப்படுத்தித் தூய்மைப்படுத்த விரும்பியது. சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தது. அதன் தமிழுணர்வு இதற்கு மேல் வளர முடியாதிருந்தது. பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கண்டு அது கசப்புற்றது. தமிழியக்கத்திற்கும் பெரியார் இயக்கத்திற்கும் ஒரு மௌன யுத்தம் தொடர்ந்து நடந்தது. பெரியாரின் இயக்கம் ஆரிய வேதங்களையும் அநீதிகளையும் மாத்திரம் கேள்வி கேட்கவில்லை. 'தமிழ் மறை’களையும் விசாரணைக்குக் கொண்டு வந்தது.'தமிழும் சைவமும்’ என்கிற முழக்கத்துடன் எண்ணாயிரம் தமிழறிஞர்களை - அவர்கள் புத்தர்களாகவும், சைனர்களாகவும், நாத்திகர்களாகவும் இருந்த ஒரே காரணத்துக்காகக் - கொன்று குவித்தவர்களை அறிவின் மேடையில் பெரியார் இயக்கம் விசாரணை செய்த போது பல 'தமிழறிஞர்கள்’ இங்கே மனத்துள் புழுங்கினார்கள். பொதுவில் தமிழியக்கம் பார்ப்பனர்களை அப்புறப்படுத்தி விட்டு 'அந்த இடத்தில்’ தன்னை வைத்துப் பார்த்தது. பெரியாரோ வர்ணாசிரம தர்மத்தின் அமைப்பு முறையையே மறுத்தார்.தமிழியக்கம் 'மேலோர்’ சார்ந்த இயக்கமாய் இருந்தது. பெரியார் இயக்கமோ ஒடுக்கப்பட்டோரின் இயக்கமாய் வளர்ந்தது. தமிழியக்கத்தின் தமிழுக்குப் பின்னே 'இறையியல்’ நின்றது. பெரியார் இயக்கத்தின் தமிழுக்குப் பின்னே 'அறிவியல்’ நின்றது.பெரியார் பொதுவாழ்க்கைக்கு வந்த நேரத்தில் கம்யூனிசம் என்பது அதிகம் படித்தோர் இயக்கமாகவும், நீதிக்கட்சி என்பது பார்ப்பனர் அல்லாத செல்வந்தர் கட்சியாகவும், தமிழியக்கம் என்பது புலவோர் இயக்கமாகவும் இருந்தது. அதேசமயம் திராவிடர் என்றால் தீண்டப்படாதார், இழிந்தோர் என்றே அரசு ஆவணங்கள் கூறின. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அந்தப் பெயரே தங்கள் இயக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. சமூகத்தின் கடைக்கோடி மக்களின் கட்சி என்று அறிவிப்பதற்காகவே திராவிடர் கழகம் என்னும் பெயரைத் தெரிவு செய்தார்கள்.திராவிடர் கழகம், திராவிட இயக்கம் பண்பும் பயனும், சாரமும் சரித்திரமும் இதுதான். புலமைப் பகட்டர்களின் மயிர்பிளக்கும் வாதங்களுக்கும், பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி விமர்சனங்களுக்கும் அப்பால் திராவிட இயக்கம் ஒரு வரலாற்றுத் தேவையாய் எழுந்தது.இந்த இயக்கத்தைக் கொச்சைப்படுத்துகிறவர்கள் தங்கள் ஆடைகளையே கிழித்துக் கொள்கிறார்கள். என்பதை வரலாறு உணர்த்தும். திராவிட இயக்கம் திசை திரும்பலாமா? என்று கேளுங்கள். அதன் வேகமும் போதாது என்று குறை சொல்லுங்கள். தன் வரலாற்றுக் கடமையை உணராத எந்த இயக்கமும் வீழ்ச்சியுறும் என்று எச்சரியுங்கள். ஆனால் பூமியின் முகத்தை அழகுபடுத்த நினைக்கும் யாரும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பைப் புறந்தள்ளி விடமுடியாது.திராவிட இயக்கம் என்கிற பெயரே எனக்குப் பிடிக்கவில்லை என்று முகம் சுளிக்கிறவர்களைத் திருத்தவே முடியாது. அது ஒரு மேட்டுக்குடி மனோபாவம். 'பாவங்களிலேயே’ மிக மோசமானது அது.
-இளவேனில் -தமிழ் சான்றோர் பேரவை செய்தி மடலில் இருந்து...

Tuesday, September 4, 2007

மண்ணின் மைந்தர்கள்

நாங்கள் இந்தமண்ணின் மைந்தர்கள்முன் தோன்றியமூத்தகுடிகள்
மழைமேகக் காதலர்கள்மகிழ்ந்து பறவைகள்ஆலோலம் பாடும்சங்கீத மேடைகள்!
மணிநிழல் பரப்பும்மரகதக் குடைகள்மாடு ஆடுகளின்ஓய்வுக் கூடங்கள்மாணவர்களின்பாடசாலைகள்மழைலையரின்விளையாட்டுத் திடல்கள்
மண்வளம் காக்கும்பசுமைக் குடில்கள்மனம் கலந்த காதலர்கள்மறைந்திருந்து பேசும்ஒதக்குப் புறங்கள்
ஏழைகளின் அடுப்பெரியும்இலவச வீடுகள்இயற்கை நட்டுவைத்தஆச்சரியக் குறிகள்!
கொஞ்சம் மண்ணும்கொஞ்சம் நீரும்கொஞ்சம் ஒளியுமேஎங்களதுகுறைந்தபட்ச தேவைகள்!
கனிக் குலைகளால்விதை மணிகளால்விருந்தாவோம்உங்கள் பசிக்கு!
வேரால் விழுதால்பட்டைகளால்கொட்டைகளால்இலைகளால்ஈர்க்குகளால்மருந்தாவோம்உங்கள் நோய்க்கு!
கிளைக் கைளில்பூக்களைச் சுமந்துபுதுவசந்தங்களால்இந்தப் பூமியைஅழகுப் படுத்துவோம்!
நீங்கள் இளைப்பாறநிழல் பரப்புகளைப்பாறக்கவரி வீசுவோம்!
உங்கள் நாசிகளுக்குமூச்சுக் காற்றாவோம்!நீங்கள் விடும்நச்சுக் காற்றைநல்ல காற்றாகமாற்றும்சுத்திகரிப்புநிலையங்களாகி நிற்போம்!
மண்ணில் இருந்தாலும்விண்ணைத் தொடுவதேஎங்கள் இலட்சியம்!
முடிவின் தொடக்கமாய்மீண்டும் முளைத்தெழவிட்டுச் செல்வோம்வீரிய விதைகளைஉங்கள் கைகளில்!
இயற்கைக்குஎதிராகஆயுதங்களுடன்அலையும்மனித குலத்தீர்!
எங்களை அழித்துஉங்களைஅழித்துக் கொள்ளாதீர்!
நாங்கள்நிரந்தரமானவர்கள்அழிவதே இல்லை!
நாளைமனிதர்கள் இல்லாமல்உலகம் இருக்கலாம்மரங்கள் இல்லாமல்உலகம் இருக்குமா?

தேசியம்

“சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால் இந்தியாவில் தேசியம் என்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார் அதாவது மேல் சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் விற்பனை செய்யப பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் தயாரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியால் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்க உபயோகிக்கப் பட்டுவரும் பாதகமும் அபாயகரமமான அர்த்தமற்ற ஒரு வார்த்தை யாகும்”

மார்க்சியம் - பெரியாரியம் - தேசியம்’ நூல் மதிப்புரை

‘தமிழ்த் தேசியத்துக்கு’ வரைவிலக்கணம் எழுதும் உரிமையை தனதாக்கிக் கொண்டு ‘தமிழர் கண்ணோட்டத்தில்’ அவ்வப்போது எதிர்வினையாற்றி வருகிறார் தோழர் பெ. மணியரசன்.
‘பெரியார் : ஆகஸ்டு 15’ நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு நிகழ்வில் (18.2.2007) நூலாசிரியர் தோழர் எஸ்.வி. ராஜதுரை நிகழ்த்திய உரையின் சுருக்கம் ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’தில் வெளி வந்தவுடன், தோழர் பெ. மணியரசன் (பெ.ம.), தனது பேனாவைத் தூக்கிவிட்டார். இதற்கு எஸ்.வி.ஆர். விரிவான பதிலளித்து எழுதிய நூலே ‘மார்க்சியம்; பெரியாரியம்; தேசியம்’ எஸ்.வி.ஆர். தந்துள்ள விரிவான பதிலுடன் பெ.ம. எழுதிய மறுப்பு, கவிஞர் தமிழேந்தி ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழுக்கு எழுதிய மறுப்பு, தமிழேந்திக்கு பெ.ம. தந்த பதில்; ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.கவிஞர் தமிழேந்தி - தனது கடிதத்தில் “பெ.ம. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற தன்மையில் தோழமை மறந்து எழுது வதாக” சுட்டிக்காட்டியிருக்கிறார் அதை உறுதிப்படுத்தி, பெ.ம.வின் பேனாவிலிருந்து சிதறிய சிந்தனைகள் சில:• பெரியார் திராவிடர் கழகத்தை - ஒரு “பூதம்” பிடித்தாட்டு கிறது; அது ‘தமிழ்த் தேசிய பூதம்’.• 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாளிய அய்ரோப்பாவை ஒரு ‘பூதம்’ பிடித்தாட்டுகிறது. அது ‘கம்யூனிச பூதம்’ என்று காரல் மார்க்சும், ஏங்கல்சும் சொன்னதோடு ஒப்பிட்டு, பெரியார் திராவிடர் கழகத்தை தமிழ்த் தேசிய பூதம் பிடித்தாட்டுகிறது என்று கூறுகிறார், பெ.ம. அதாவது பெரியார் திராவிடர் கழகத்தை - மிரள வைத்துக் கொண்டிருக்கிறதாம், பெ.ம. நடத்தும் ‘தமிழ்த் தேசியப் புரட்சி’.• பெரியார் தி.க.வின் கிழமை ஏடான ‘பெரியார் முழக்க’த் தில் - “அவ்வப்போது தமிழ்த் தேசியத்தை எதிர்த்தோ அல்லது அதன்மீது அவதூறு பொழிந்தோ ஏதாவது ஒன்று எழுதிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்” என்கிறார், பெ.ம.- கவனியுங்கள்; ஏதாவது ஒன்றை; எழுதிக் கொண் டிருக்கிறார்களாம்!• பூதம், பிசாசு என ஏதுவுமில்லை என்று பரப்புரை நிகழ்த்திவரும் பெரியார் தி.க. தோழர்களுக்கு ‘தமிழ்த் தேசியம் மட்டும் பூதமாக’த் தெரிகிறது என்கிறார். ‘பூதம்-பிசாசு’ இல்லை என்ற பரப்புரைகூட இங்கே ‘எள்ளல்’ செய்யப்படுகிறது. • மிரண்டு போய் நிற்கும் பெரியார் தி.க. “பெ.ம.”க்களின் ‘புரட்சி’யை எதிர் கொள்ளத் திணறி நின்ற காலத்தில் நல்லவேளையாக - பெரியார் திராவிடர் கழகத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பூசாரி வந்து சேர்ந்தாராம். அவர் தான் ‘எஸ்.வி.ஆர்.’ - என்கிறார் ‘பெ.ம.’• எஸ்.வி.ஆர். மதிக்கத்தக்க அறிவாளிதான் என்கிறார் பெ.ம. - அதாவது, பெ.ம. மதிக்கத்தக்க அறிவாளி என்பது, இதில் அடங்கியுள்ள கூடுதல் சிறப்பு. ஆனாலும் அவர் மார்க்சியத்தை வளர்க்க உருப்படியாக எதையும் செய்ய வில்லை என்றும், பெ.ம. அறிவித்துவிட்டார். ஆனாலும் - பெரியாரியலை நிலைநிறுத்தப் பாராட்டத்தக்கப் பங்களிப்பும் செய்துள்ளதாக ஏற்பு வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் சார்பில் நன்றியும் தெரிவித்திருக்கிறார். இதற்காக தோழர் எஸ்.வி.ஆர். பெருமையடையலாம்.
• கவிஞர் தமிழேந்திக்கு எழுதியுள்ள ‘மறுமொழி’யில் - தோழர் பெ.ம. ‘பெரியார் திராவிடர்கழகம் பெயரில் வேண்டுமானால் ‘திராவிடர்’ என்பதை வைத்துக் கொள் ளட்டும்’ என்று அனுமதித்திருக்கிறார். ‘சமூக அறிவிய லுக்கும் வரலாற்றுப் புரிதலு’க்கும் ஏற்ப - திராவிடம் என்ற பெயரைக் கைவிட வேண்டும். கைவிட மனம் இடம் கொடுக்கவில்லை என்றால், இடுகுறிப் பெயராக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்” என்று மணியரசன் ‘ஜனநாயக உணர்வோடு’ ஆணை யிட்டுள்ளார். “இல்லாவிட்டால் எதிர்வினை புரியத்தான் வேண்டியுள்ளது’ என்று எச்சரிக் கிறார்!
• ‘பெ.ம.’ முன் வைக்கும் தமிழ்த் தேசியம் ‘புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியல்’ என்றும் அவர் பிரகடனம் செய்து விட்டார்.• அதே நேரத்தில் ‘பெரியார் தேசிய இன வழிபட்ட தேசியத்தை மறுத்தது பெரியார் கருத்தியலுக்கு ஒரு ஊனமே’ என்பதையும் பெ. மணியரசன் எடுத்துக் காட்டிவிட்டார்.
அதாவது மணியரசன் முன் மொழியும் ‘புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியலை’ பெரியார் சிந்திக்கத் தவறிவிட்டார். அது தமிழ்த் தேசியத்துக்கு ஊனமாகிவிட்டது என்பது பெ.ம. வழங்கியுள்ள ‘உச்சநீதி’ மன்றத் தீர்ப்பு.
• பெ.ம. காட்டிய ‘புரட்சி வழி’யைப் பெரியார் பின்பற்றி யிருந்தால்...• கடவுள், மத, சாதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.• மூடநம்பிக்கையை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருக்க வேண்டாம்.• வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டுக்காக போராடியிருக்க வேண்டாம்.• சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசக் காப்பியமாக ஏற்றுக் கொண்டு, கண்ணகி கோயிலுக்கு ஆண்டுதோறும் போய் வந்திருக்க வேண்டும்.• சூத்திர இழிவு ஒழிப்பு; பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்திருக்கவே தேவையில்லை; பார்ப்பனிய எதிர்ப்பு என்று பேசியிருந்தாலே போதுமானது.• கேரளாவுக்குப் போய் வைக்கத்திலே போராடி ‘தமிழ்த் தேச’ துரோகியாகியிருக்க வேண்டாம்.• சூத்திர இழிவை வலியுறுத்துகிறது என்று இந்துமதத்தைக் கடுமையாக சாடி தமிழர் ஒற்றுமையை சிதைத்திருக்க வேண்டாம்.• தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறைகளுக்கு தனியாக குரல் கொடுத்து, தமிழர்களைக் கூறு போட் டிருக்க வேண்டாம். பெரியார் தமிழ்த் தேசியத்தில் ஏற்படுத்திய ‘ஊனம்’தான் - இத்தகைய தேவையற்ற வீணான நடவடிக்கைகளில், அவரை ஈடுபடச் செய்துவிட்டது. பெ.ம.வின் புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தில் மேற்குறிப்பிட்ட ‘கருத்தியல்கள்’ இடம் பெறாததால்தான் அது புரட்சிகரத் தமிழ்த் தேசியமாக உருவெடுத்துள்ளதோடு பெரியார் தி.க.வை ‘பூதமாக’ மிரட்டிக் கொண்டிக்கிறது! இது பெரியாருக்குப் புரிய வில்லை என்கிறார் பெ.ம.
இவை மட்டுமா? எஸ்.வி.ஆரை குற்றக் கூண்டில் நிறுத்தி பல கேள்விக் கணைகளை வீசோ வீசென்று வீசியிருக்கிறார். அதற்கு எஸ்.வி.ஆரும் பதிலளித்துள்ளார். அது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
- கோடங்குடி மாரிமுத்து

ரா’ உளவு நிறுவனத்தைச் சார்ந்த முன்னாள் அதிகாரி கைது

‘ரா’ உளவு நிறுவனம் - தமிழ் ஈழப் பிரச்சினையில் தலையிட்டு நடத்திய ‘திருவிளையாடல்களை’ பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டதைத் தொடர்ந்து - ‘ரா’ பற்றிய பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன. உளவுத் துறை முன்னாள்அதிகாரிகள் இருவர், ‘ரா’வை அம்பலப்படுத்தி எழுதிய 2 நூல்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளன. இப்போது ‘ரா’ முன்னாள் அதிகாரி ஒருவர் சென்னையில் கைதாகியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று, சி.பி.அய். குற்றம் சாட்டியிருந்தாலும் - உண்மையில் புலிகளுக்கு உதவினாரா? அல்லது ‘ரா’ பற்றிய வேறு தகவல்களை வெளியிடத் திட்டமிட்டாரா என்பது புரியவில்லை. இது பற்றி கொழும்பிலிருந்து வெளிவரும் ‘சண்டே டைம்°’ நாளேடு வெளியிட்ட தகவல்:சென்னையில் நான்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த கௌரி மோகன்தா° என்ற ‘ரா’ உளவு நிறுவன முன்னாள் அதிகாரி கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த 1987-1990 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் கொழும்பில் ‘ரா’ அதிகாரியாக அவர் பணியாற்றினார்.கௌரி மோகன்தாசின் வீட்டை சோதனையிட்ட புலனாய்வுத் துறையினர், அங்கு ஆயுதங்கள் தொடர்பிலான விளக்கப் புத்தகங்களையும் ‘ரா’ தொடர்பிலான முக்கியமான உளவு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். சில உளவு ஆவணங்களை விடுதலைப் புலிகளுக்கு கௌரி மோகன்தா° விற்பனை செய்திருக்கக் கூடும் என்று புலனாய்வுத் துறையினர் நம்புகின்றனர். அவரது வங்கிக் கணக்கையும் சோதனையிட உள்ளனர்.இந்திய அமைதிப்படை காலத்தில் பணிபுரிந்த மேலும் 4 ‘ரா’ அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்தியப் புலனாய்வுத் துறையினர் வட்டாரங்கள் கூறின என்று கொழும்பு ஆங்கில ஏடு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் முகில்ராசு இல்ல மணவிழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

திருப்பூர் கோட்ட அமைப்பாளர் முகில்ராசு சகோதரர் பெ.பிரேம்குமார், ஈரோடு பெருமாள் மலை இராமமூர்த்தி - பாக்கியம் ஆகியோரது மகள் ரேணுகா ஆகியோர் வாழ்க்கை துணை ஒப்பந்த விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன், செந் தலை கவுதமன், ஆட்சிக்குழு உறுப் பினர் பொள்ளாச்சி மனோகரன், மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்க குமார், ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன், தென்மொழி துரையரசனார், தாய்த்தமிழ்ப் பள்ளி தாளாளர் தங்கராசு, ஈரோடு முத்தமிழ் கலாமன்ற தலைவர் நாராயணசாமி, செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சிக்கு வந்திருந் தவர்களை ஆசிரியை வீ. சிவகாமி வர வேற்றார். முடிவில் முகில்ராசு நன்றி கூறி னார். விழாவை முன்னிட்டு பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.5000/- கழகத் தலைவரிடம் முகில்ராசு வழங்கினார்.

தீண்டாமை

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால் அதை மன்னிக்கவோ அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளைப் பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.”
- பெரியார் ( ‘பகுத்தறிவு’ இதழ் 10: மலர் 3 -1938)