Friday, December 12, 2008

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”


“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”

vps2

முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.

வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?

91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் “விபி.சிங்கைக் கொல்வோம்” …… “கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம்”…… என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. அந்த வேளையில்…… அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஒரே ஒரு காரணம்தான்.

அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)

ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……

மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.

இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :
மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.

“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.

“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். ஆனால்…… பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”

(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.

ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.

தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……

தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.

அவ்வளவு ஏன்…… பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.

நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.

ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. புற்று நோயோடு போராடியபடியும்…… வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.

தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… நிலமற்ற தொழிலாளர்கள்…… “நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.

ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?

இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.

ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……

“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”

உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’

சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.

எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

சென்றுவா எம் நண்பனே.



நன்றி

http://pamaran.wordpress.com

Friday, November 28, 2008

வீரவணக்கம்

சமூகநீதிப்போராளி 
வி.பி. சிங் 
அவர்களுக்கு
வீரவணக்கம்

Tuesday, October 28, 2008

ஜெயலலிதா பிதற்றல்

தமிழீழம்
"இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டுப் பிரச்னை. அதில் இந்தியா தலையிட முடியாது. கருணாநிதி முதலில் இதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று சொல்லியிருக்கிறாரே ஜெயலலிதா?

ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்னை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி ராஜ்ஜியமாக இருந்த போது இந்திய ராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப் படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் ஏஸி அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்.

நன்றி. குமுதம் வார இதழ்

Wednesday, October 1, 2008

சுயமரியாதை

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
தந்தை பெரியார்

Thursday, September 11, 2008

"நான் மனிதனே!

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

Saturday, August 23, 2008

எனது கடமை

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துக்களைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக் கொள்ளா விட்டாலும் நாளை ஒரு நாள் ஏஏற்றுக்கொள்ளும் நிலை வரும். இக்கருத்துக்களை சொல்லும் நிலையில் நான்தான் இருக்கிறேன். சொல்ல வெண்டிய கருத்துக்களை நானே எழுதி,நானே அச்சுக்கோத்து, நானேஅச்சிட்டு, நானே படித்துக்கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடியரசை வெளியிட்டு என்கருத்துக்களை வரும் தலை முறைக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை. [குடியரசு-10.06.1929]
-தந்தைபெரியார்

Wednesday, August 20, 2008

சமரசம் என்ற பேச்சே இல்லை

எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது.
இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம்.
நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம்.
அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம்.
எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய...
எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும்.
இனி சமரசம் என்ற பேச்சே இல்லை.
எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும்.
-ரிவோல்ட் [3-11-1929]

Sunday, August 17, 2008

அறம்

அறம் என்றால் மக்களுக்கு தம்மாலான நல்லனவற்றைச் செய்வதுதான். அதுதான் உண்மையான தொண்டு. இதனை விடுத்து இந்த உலகத்தை விட்டு மோட்ச உலகம் செல்லவேண்டும் என்று கருதியோ, மற்றமுட்டாள் தனமான காரியங்களுக்கோ தொண்டு செய்வதனால் உண்மையான இன்பம் கிட்டாது.
-தந்தைபெரியார்

Friday, August 15, 2008

மொழி

எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால்! உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால்! உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு-எனது மக்கள் முற்போக்கு அடைவதற்கு-மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதி விட்டுவிட்டுப் பயனளிக்கக்கூடியதைப் பின்பற்றுவேன்.
-தந்தைபெரியார்

Tuesday, August 12, 2008

நமது இழிவு நீங்கி மேம்பாடடைய...

நமது சமுதாயத்தில் உள்ள ஒரு பெரிய குறை நமக் கென்று நமது இனத்திற் கென்று ஒரு தாபனம்,ஒரு தலைவன் இல்லாததே யாகும். எந்த உத்தியோகம் பார்த்தாலும் எந்தக் கொள்கை உடையவர்களாக இருப்பினும், எந்தச் சாதியைச் சார்ந்தவராக இருப்பினும் எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், தமிழன் என்றால் எல்லோரும் ஒன்றாகக் கூட வேண்டும். அதில் எந்தக் கருத்து வேறுபாட்டிற்கும் இடம் இருக்கக்கூடாது. ஆகவே தமிழர்கள் யாவரும் ஒன்று கூடும்படியான ஒரு தாபனம் வேண்டும் அதைத் துவக்க நீங்கள் முயற்சி எடுத்துக்கொள்ளவெண்டும். அந்த தாபனத்தில் தமிழர்கள் அனைவரையும் உறுப்பினர்களாக்க வேண்டும் அதற்குத் தமிழர் முன்னேற்றத் தாபனம் என்றோ, ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றத்தாபனம் என்றோ ஏதோ ஒரு பெயர் வைத்துக்கொண்டு தமிழர் அனைவரையும் அதில் உறுப்பினராக்க வேண்டும். தமிழர்களுக்கு எற்படும் குறைகளை அதன் மூலம் போக்கிக் கொள்ள முற்பட வேண்டும்.
-தந்தை பெரியார்

Sunday, August 3, 2008

தொண்டு

சமுதாயத் துறைக்குப் பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்
தந்தைபெரியார்

Thursday, July 31, 2008

இழிதன்மை

நம் வீட்டுக்குள் அந்நியன்புகுந்து கொண்டதோடல்லாது ,அவன் நம் எஜமான் என்றால் _நமக்கு இதை விட மானமற்றதன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்.
-தந்தைபெரியார்

Wednesday, July 30, 2008

மாறுதல்

காலத்துக்கு ஏற்ற மறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்குத் தகுதியுடையவனாவான்.
-தந்தை பெரியார்

Tuesday, July 29, 2008

சாதி-தீண்டாமை ஒழிய

தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலை நிறுத்தத்தான்சாதி-மத-தெய்வ சம்பந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதேயழியஇவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல. இதனாலேதான் நாம்தீண்டாமை ஒழிவுக்கு சாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கிறோம். இம்மூன்றும் ஒழியப் போவதில்லை. தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை சாதி இருந்துதான் தீரும்.சாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்
-தந்தை பெரியார்

Monday, July 28, 2008

பல துறைகளுக்கு

1. மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால்பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால்தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறைஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில் துறையில் தொழிலாளர்களிடையே சுமூகமும், நாணயமும்,பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.

7. அய்க்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை நீதிபதியாகநியமிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
- தந்தை பெரியார்

Friday, July 25, 2008

நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

"மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் நீர் எடுக்கக்கூடாது; என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக்குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச்செய்யாமலோ,பூமிப்பிளவில் அமிழச்செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்கமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்."
-தந்தைபெரியார்

Thursday, July 24, 2008

இழிசாதித் தன்மை நீங்க

நமக்கு மந்திரி பதவியோ,கவர்னர் பதவியோ தேவையில்லை நமக்குத் தேவை எல்லாம் நமது இன இழிவு ஒழிப்பே. அது இந்த ஆட்சியால் முடியாது என்றால் இந்த ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டியது தான். ஒழித்துவிட்டு என்னசெய்வாய்? துலுக்கனையோ, ருசியக்காரனையோ,ஜெர்மன்காரனையோ, ஜப்பான்காரனையோ கூப்பிட்டுக் கொள்ள வேண்டியது தான்! நம்மை இழிசாதி என்று சொல்லாதவன் எவனாவது ஆண்டு விட்டு போகட்டுமே.
-தந்தைபெரியார்

Wednesday, July 23, 2008

பொதுத் தொண்டு

பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை
அவன் தன் லட்சியத்திற்குக்
கொடுக்கும் விலையாகும்.
-தந்தைபெரியார்

Monday, July 21, 2008

எனது உணர்ச்சி...

ஒரு தாயின் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு,அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்க்கை குணமாக இருக்குமோ அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத்தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப்போய்,வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு , மற்றக் குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையை விட எப்படி அதிக போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரி சமசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ,அது போலத்தான் நான் வலுக் குறைவான பின் தங்கிய மக்களிட்ம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும்,மற்ற வகுப்பு மக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சியாகும்.

-தந்தைபெரியார்

Saturday, July 19, 2008

ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்?

வான் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்?அதன் உச்சிக்கெல்லாம் தங்க முலாம் பூசியவர் யார்? தில்லை நடராஜனுக்கு தங்க கூரை வேய்ந்து தந்தவர் யார்? ஆங்காங்கு ஆயிரங்கால் மண்டபங்கள் எழுப்பித்தந்தவர் யார்? சத்திரம் சாவடி கட்டி வைத்தவர் யார்? ஒரு பார்ப்பானாவது ஒரு செல்லாக் காசாவது கோயில்,குளம்-தான தர்மம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க, இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாக இருக்கவேண்டும்? அவர்கள் மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமலே நம்மை ஏமாற்றி உண்டு பிராமணர்களாய் வாழ வேண்டும்? நாம் ஏன் இன்று கடவுளையே குடுமியை பிடித்து ஆட்டுகிறோம்? ஏன்? அதனால் நல்லது உண்டாகவில்லை. இது சாமியா குழவிக்கல்லா என்று கூடத் துணிந்து கேட்கிறோம் . அது நட்டது நட்ட படியே நின்று கொண்டிருக்கிறதே-"ஆம் உண்மை உண்மை" என்று ஒப்புக்கொள்ளும் தன்மையில். இப்படியெல்லாம் சொல்வதற்காக எந்தச்சாமியும் நம்மீது மான நட்ட வழக்கு தொடரக்காணோமே!
-தந்தை பெரியார்

Tuesday, July 15, 2008

ஒழுக்கம் வளர...

யோக்கியர்களே அரசியல், பொதுவாழ்வுக்கு வரும்படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை. ஏதோ ஒரு சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள் யோக்கியமாய் நடந்துகொள்ளமுடியாத சூழ்நிலையும்,யோக்கியமாய் நடந்து கொண்டாலும் பயன் எற்படாத சூழ்நிலையும் இருந்து வருவதனால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று அவர்கள் கருதும்படியாக நேரிட்டு விடுகிறது. மனித ச்முதாயத்தில் ஒழுக்கமும் நல்ல அரசியலும் ஏற்பட வேண்டுமானால் அயோக்கியத் துரோகிகளை, மானமற்ற இழிமக்களை,நாணயம்-ஒழுக்கமற்ற ஈனமக்களைப் பொது வாழ்வில் தலைகாட்டாமல் அடித்து விரட்டுவதேதான் சரியான வழியாகும்
- தந்தை பெரியார்

Friday, July 11, 2008

நீதிபதிகள்

வக்கீல்கள் தொழிலே பொய், புரட்டுபேசி எப்படியாவது தமது கட்சிக்காரனைசெயிக்க வைக்க வேண்டும் என்பதாகும். கொலை செய்தவனைக் நிரபராதி என்றும், நிரபராதியைக் கொலையாளி என்றெல்லாம் வாதிப்பவர்கள். இவர்களில் இருந்து நீதிபது வந்தால் அவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? நேற்று வரையில் விபச்சாரத் தொழில் புரிந்தவளை அவள் பத்தினியாக இனி நடப்பாள் என்று எதிர்பார்ப்பது போன்றதே யாகும்
.-தந்தைபெரியார்

நீதி என்றால் என்ன?

நல்லவர்களைப் பாதுகாக்க வேண்டும். கஷ்டப்பட்டவர்களைக் கைதூக்கி விட வேண்டும். குறைபாடுகள் உள்ளவர்களின் குறைகளைக் களைய வேண்டும். அதுபோலவே குற்றம் புரிபவர்களைத் தண்டிக்கவும், கொலைகாரர்களைக் கொல்லவும், அக்கிரமக்காரர்களை அழிக்கவும் வேண்டும்.
-தந்தைபெரியார்

Thursday, July 10, 2008

கண்ணாமூச்சி

சின்னவனாய் அன்று...
என் கண்களை கட்டிவிட்டு ஆட்களை கண்டுபிடி என்றார்கள்.
முயன்றேன்... முடியவில்லை
பெரியவனாய் இன்று- கண்களைத் திறந்துகொண்டே ஆட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு...
முயல்கிறேன்... முடியவில்லை.

- காசி ஆனந்தன்

Wednesday, July 9, 2008

சலவை

உழைக்காதவன் வியர்வையை
கழுவிக்கொண்டிருக்கிறது...
உழைக்கிறவன் வியர்வை
-காசிஆனந்தன்

Saturday, July 5, 2008

மதம்

ஏழைகளின் கோபத்திலிருந்து
பணக்காரர்களை காப்பாற்றும்
எளிய தந்திரத்தின் பெயர்தான்
மதம்
ஆஸ்கார் ஒயில்ட்

Friday, July 4, 2008

அணு ஒப்பந்த அழிச்சாட்டியம்!

கள்ளத் திருடன்பேர் கரிகாற் சோழனா?
கொள்ளைக் காரன் பேர் குமண வள்ளலா?
குடலை உருவி மாலையாய்ப் போடும்

கொள்ளிவாய்ப் பேய் குடியிருக்கும் இடம்பேர்
'வெள்ளை மாளிகை' என்றால் விளங்குமா?
பிணமலை அடுக்கப் பெருக்கத்தின் பேர்தான்

அணு ஒப்பந்தம் அழிச்சாட் டியமா?
அழுகிய மலமே! பழிகார புஷ்ஷே
படுகுழி வெட்டப் பழகிப் பழகிச்

சுடுகாட்டையே நீ தொழுது கிடக்கிறாய்!
உன்சுட்டு விரலுக்கு கட்டுப் பட்டே

பெட்டிப் பாம்பாய் எம்பெருந் தலைகள்
நூறுகோடிப்பேர் தன்மானத்தைக்
கூறுபோட்டு உன்முன் குனிந்து நிற்க
மானங்கெட்ட ஒரு மன்மோகன் சிங்
அலுவாலியா சித்ம்பரஅடிமைக் கும்பல்
அடுத்த வரிசையில் அத்வானி... சின்ஹா...
உன் ஆதிக்க வலையில் வீழ்ந்தபின்
தன்னாதிபத்திய தம்பட்டம் எதற்கு?
அங்கேபார்!
கியூபா நாட்டுக்கிழவன் காஸ்ட்ரோ
பிடரி சிலிர்க்கப் பீரிட் டெழுகிறான்
அர்ஜென்டீனா அரிமா முழக்கம்
கயவனே உன் காதுகள் கிழிக்கும்
ஐ.நா.மன்ற சுவர்கள் அதிர
முதுகெலும்புள்ள சாவேஸ் எழுந்து
சாத்தான் என்றுனைச் சாற்றிய வீரம்
சிவப்புக் கேயுள்ள செம்மாந்தப் பெருமிதம்.
-- தமிழேந்தி
நன்றி.சிந்தனையாளன் ஜூலை 2008

Wednesday, July 2, 2008

மனிதச்சீவன்

சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு...மதத்தின் பெயரால் வேற்றுமை உணர்ச்சி...தேசத்தின் பெயரால் குரோதத் தன்மை... முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும் கடவுளின் பெயரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத்தன்மைகள் மனிதச் சீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனிதச்சீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட தீய இழிவான அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லாச் சீவராசிகளை விட மனிதச்சீவன் மூளை விசேடம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட சீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில் எவ்விதத்திலும் மனிதச்சீவன் மற்றசீவப்பிராணிகளை விட உயர்ந்ததல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது
-தந்தைபெரியார்

Tuesday, July 1, 2008

இயக்கம்

ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கும் வரையிலும், ஒருவன் தினம் ஒருவேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டு விட்டு வயிற்றைத் தாடவிக்கொண்டு சாயுமான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற தன்மையும் இருக்கிற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல்திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக்கொண்டு உல்லாசமாக திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும்,பண்க்காரர்க ளெல்லாம் தங்களது செல்வம் முழுமையும் தங்களுடைய சுய வாழ்விற்கே எற்ப்பட்டது என்று கருதிக்கொண்டிருக்கிற தன்மை இருக்கின்ற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தேதான் தீரும்.மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்விய்க்கத்தை ஒழிக்க யாராலும் முடியாதென்பதே நமது உறுதி.
-தந்தைபெரியார்

Monday, June 30, 2008

வாழ்க்கை

தம்மைத் தாம் பெரிதாகவும்,தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டு மென்றும் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும் வருவாயும் வந்தாலும் ஆசையால் மனம் வாடிச் சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன்காரர்களாகவும் தான் இருப்பார்கள். ஆதலால் வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமே ஆகும். என்னை நான் சின்னவன் என்றும்,குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக்கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே யழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதேபோல் மனதைகட்டுப்படுத்தச் சக்தி இருந்தால் எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
-தந்தைபெரியார்

Sunday, June 29, 2008

மாறுதலால் எதிர்கால உலகம்...

சகல சவுகரியங்களுமுள்ள இப் பரந்த உலகில் உணவுக்காகஎன்று ஒருவன் ஏன் பாடுபட வேண்டும்? ஏன் சாக வேண்டும்? என்கின்றபிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்த சிக்கலான பிரச்சினைகளாக இருந்தன. இன்று தெளிவாக்கப்பட்டும் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்த போக்கு சீக்கிரத்தில் மக்களின் பொது வாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும் படியான புதிய உலகத்தை உண்டாக்க்கித்தான் தீரும் அப்போதுதான் பணம்,காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரசு ஆட்சி இருக்காது; கடினமான் உழைப்பு என்பது இருக்காது; இழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத்தன்மை இருக்காது; ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இருக்காது; பெண்களுக்கு காவல் கட்டுப்பாடு பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.