Monday, June 30, 2008

வாழ்க்கை

தம்மைத் தாம் பெரிதாகவும்,தம் தகுதிக்கு மேற்பட்ட சன்மானம் வேண்டு மென்றும் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டே தீருவார்கள். எவ்வளவு பெரிய பதவியும் வருவாயும் வந்தாலும் ஆசையால் மனம் வாடிச் சதா அதிருப்தியில் ஆழ்ந்துதான் இருப்பார்கள். எப்போதும் கடன்காரர்களாகவும் தான் இருப்பார்கள். ஆதலால் வருவாய் போதாமல் இருப்பதற்கும் கடன்காரர்களாய் இருப்பதற்கும் காரணம் நமது பலவீனத்தின் பயனான பேராசையும் அவசியமுமே ஆகும். என்னை நான் சின்னவன் என்றும்,குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாகவும் கருதிக்கொண்டிருக்கிறேன். நான் மூட்டை தூக்குவதில் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே யழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டதில்லை. அதேபோல் மனதைகட்டுப்படுத்தச் சக்தி இருந்தால் எல்லாம் தானாகவே சரிப்பட்டு விடும்.
-தந்தைபெரியார்

Sunday, June 29, 2008

மாறுதலால் எதிர்கால உலகம்...

சகல சவுகரியங்களுமுள்ள இப் பரந்த உலகில் உணவுக்காகஎன்று ஒருவன் ஏன் பாடுபட வேண்டும்? ஏன் சாக வேண்டும்? என்கின்றபிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்த சிக்கலான பிரச்சினைகளாக இருந்தன. இன்று தெளிவாக்கப்பட்டும் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்த போக்கு சீக்கிரத்தில் மக்களின் பொது வாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும் படியான புதிய உலகத்தை உண்டாக்க்கித்தான் தீரும் அப்போதுதான் பணம்,காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரசு ஆட்சி இருக்காது; கடினமான் உழைப்பு என்பது இருக்காது; இழிவான வேலை என்பது இருக்காது; அடிமைத்தன்மை இருக்காது; ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழ வேண்டிய அவசியம் இருக்காது; பெண்களுக்கு காவல் கட்டுப்பாடு பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.