‘தமிழ்த் தேசியத்துக்கு’ வரைவிலக்கணம் எழுதும் உரிமையை தனதாக்கிக் கொண்டு ‘தமிழர் கண்ணோட்டத்தில்’ அவ்வப்போது எதிர்வினையாற்றி வருகிறார் தோழர் பெ. மணியரசன்.
‘பெரியார் : ஆகஸ்டு 15’ நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு நிகழ்வில் (18.2.2007) நூலாசிரியர் தோழர் எஸ்.வி. ராஜதுரை நிகழ்த்திய உரையின் சுருக்கம் ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’தில் வெளி வந்தவுடன், தோழர் பெ. மணியரசன் (பெ.ம.), தனது பேனாவைத் தூக்கிவிட்டார். இதற்கு எஸ்.வி.ஆர். விரிவான பதிலளித்து எழுதிய நூலே ‘மார்க்சியம்; பெரியாரியம்; தேசியம்’ எஸ்.வி.ஆர். தந்துள்ள விரிவான பதிலுடன் பெ.ம. எழுதிய மறுப்பு, கவிஞர் தமிழேந்தி ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழுக்கு எழுதிய மறுப்பு, தமிழேந்திக்கு பெ.ம. தந்த பதில்; ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.கவிஞர் தமிழேந்தி - தனது கடிதத்தில் “பெ.ம. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற தன்மையில் தோழமை மறந்து எழுது வதாக” சுட்டிக்காட்டியிருக்கிறார் அதை உறுதிப்படுத்தி, பெ.ம.வின் பேனாவிலிருந்து சிதறிய சிந்தனைகள் சில:• பெரியார் திராவிடர் கழகத்தை - ஒரு “பூதம்” பிடித்தாட்டு கிறது; அது ‘தமிழ்த் தேசிய பூதம்’.• 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாளிய அய்ரோப்பாவை ஒரு ‘பூதம்’ பிடித்தாட்டுகிறது. அது ‘கம்யூனிச பூதம்’ என்று காரல் மார்க்சும், ஏங்கல்சும் சொன்னதோடு ஒப்பிட்டு, பெரியார் திராவிடர் கழகத்தை தமிழ்த் தேசிய பூதம் பிடித்தாட்டுகிறது என்று கூறுகிறார், பெ.ம. அதாவது பெரியார் திராவிடர் கழகத்தை - மிரள வைத்துக் கொண்டிருக்கிறதாம், பெ.ம. நடத்தும் ‘தமிழ்த் தேசியப் புரட்சி’.• பெரியார் தி.க.வின் கிழமை ஏடான ‘பெரியார் முழக்க’த் தில் - “அவ்வப்போது தமிழ்த் தேசியத்தை எதிர்த்தோ அல்லது அதன்மீது அவதூறு பொழிந்தோ ஏதாவது ஒன்று எழுதிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்” என்கிறார், பெ.ம.- கவனியுங்கள்; ஏதாவது ஒன்றை; எழுதிக் கொண் டிருக்கிறார்களாம்!• பூதம், பிசாசு என ஏதுவுமில்லை என்று பரப்புரை நிகழ்த்திவரும் பெரியார் தி.க. தோழர்களுக்கு ‘தமிழ்த் தேசியம் மட்டும் பூதமாக’த் தெரிகிறது என்கிறார். ‘பூதம்-பிசாசு’ இல்லை என்ற பரப்புரைகூட இங்கே ‘எள்ளல்’ செய்யப்படுகிறது. • மிரண்டு போய் நிற்கும் பெரியார் தி.க. “பெ.ம.”க்களின் ‘புரட்சி’யை எதிர் கொள்ளத் திணறி நின்ற காலத்தில் நல்லவேளையாக - பெரியார் திராவிடர் கழகத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பூசாரி வந்து சேர்ந்தாராம். அவர் தான் ‘எஸ்.வி.ஆர்.’ - என்கிறார் ‘பெ.ம.’• எஸ்.வி.ஆர். மதிக்கத்தக்க அறிவாளிதான் என்கிறார் பெ.ம. - அதாவது, பெ.ம. மதிக்கத்தக்க அறிவாளி என்பது, இதில் அடங்கியுள்ள கூடுதல் சிறப்பு. ஆனாலும் அவர் மார்க்சியத்தை வளர்க்க உருப்படியாக எதையும் செய்ய வில்லை என்றும், பெ.ம. அறிவித்துவிட்டார். ஆனாலும் - பெரியாரியலை நிலைநிறுத்தப் பாராட்டத்தக்கப் பங்களிப்பும் செய்துள்ளதாக ஏற்பு வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் சார்பில் நன்றியும் தெரிவித்திருக்கிறார். இதற்காக தோழர் எஸ்.வி.ஆர். பெருமையடையலாம்.
• கவிஞர் தமிழேந்திக்கு எழுதியுள்ள ‘மறுமொழி’யில் - தோழர் பெ.ம. ‘பெரியார் திராவிடர்கழகம் பெயரில் வேண்டுமானால் ‘திராவிடர்’ என்பதை வைத்துக் கொள் ளட்டும்’ என்று அனுமதித்திருக்கிறார். ‘சமூக அறிவிய லுக்கும் வரலாற்றுப் புரிதலு’க்கும் ஏற்ப - திராவிடம் என்ற பெயரைக் கைவிட வேண்டும். கைவிட மனம் இடம் கொடுக்கவில்லை என்றால், இடுகுறிப் பெயராக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்” என்று மணியரசன் ‘ஜனநாயக உணர்வோடு’ ஆணை யிட்டுள்ளார். “இல்லாவிட்டால் எதிர்வினை புரியத்தான் வேண்டியுள்ளது’ என்று எச்சரிக் கிறார்!
• ‘பெ.ம.’ முன் வைக்கும் தமிழ்த் தேசியம் ‘புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியல்’ என்றும் அவர் பிரகடனம் செய்து விட்டார்.• அதே நேரத்தில் ‘பெரியார் தேசிய இன வழிபட்ட தேசியத்தை மறுத்தது பெரியார் கருத்தியலுக்கு ஒரு ஊனமே’ என்பதையும் பெ. மணியரசன் எடுத்துக் காட்டிவிட்டார்.
அதாவது மணியரசன் முன் மொழியும் ‘புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியலை’ பெரியார் சிந்திக்கத் தவறிவிட்டார். அது தமிழ்த் தேசியத்துக்கு ஊனமாகிவிட்டது என்பது பெ.ம. வழங்கியுள்ள ‘உச்சநீதி’ மன்றத் தீர்ப்பு.
• பெ.ம. காட்டிய ‘புரட்சி வழி’யைப் பெரியார் பின்பற்றி யிருந்தால்...• கடவுள், மத, சாதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.• மூடநம்பிக்கையை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருக்க வேண்டாம்.• வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டுக்காக போராடியிருக்க வேண்டாம்.• சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசக் காப்பியமாக ஏற்றுக் கொண்டு, கண்ணகி கோயிலுக்கு ஆண்டுதோறும் போய் வந்திருக்க வேண்டும்.• சூத்திர இழிவு ஒழிப்பு; பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்திருக்கவே தேவையில்லை; பார்ப்பனிய எதிர்ப்பு என்று பேசியிருந்தாலே போதுமானது.• கேரளாவுக்குப் போய் வைக்கத்திலே போராடி ‘தமிழ்த் தேச’ துரோகியாகியிருக்க வேண்டாம்.• சூத்திர இழிவை வலியுறுத்துகிறது என்று இந்துமதத்தைக் கடுமையாக சாடி தமிழர் ஒற்றுமையை சிதைத்திருக்க வேண்டாம்.• தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறைகளுக்கு தனியாக குரல் கொடுத்து, தமிழர்களைக் கூறு போட் டிருக்க வேண்டாம். பெரியார் தமிழ்த் தேசியத்தில் ஏற்படுத்திய ‘ஊனம்’தான் - இத்தகைய தேவையற்ற வீணான நடவடிக்கைகளில், அவரை ஈடுபடச் செய்துவிட்டது. பெ.ம.வின் புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தில் மேற்குறிப்பிட்ட ‘கருத்தியல்கள்’ இடம் பெறாததால்தான் அது புரட்சிகரத் தமிழ்த் தேசியமாக உருவெடுத்துள்ளதோடு பெரியார் தி.க.வை ‘பூதமாக’ மிரட்டிக் கொண்டிக்கிறது! இது பெரியாருக்குப் புரிய வில்லை என்கிறார் பெ.ம.
இவை மட்டுமா? எஸ்.வி.ஆரை குற்றக் கூண்டில் நிறுத்தி பல கேள்விக் கணைகளை வீசோ வீசென்று வீசியிருக்கிறார். அதற்கு எஸ்.வி.ஆரும் பதிலளித்துள்ளார். அது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
- கோடங்குடி மாரிமுத்து
No comments:
Post a Comment